இரவச்சம்

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.   (௲௬௰௧ - 1061)
 

தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும் (௲௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும். (௲௬௰௧)
—மு. வரதராசன்

ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும். (௲௬௰௧)
—சாலமன் பாப்பையா

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும் (௲௬௰௧)
—மு. கருணாநிதி

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.   (௲௬௰௨ - 1062)
 

முயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர் வாழ்தலை, இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானானால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக! (௲௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக. (௲௬௰௨)
—மு. வரதராசன்

பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக. (௲௬௰௨)
—சாலமன் பாப்பையா

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும் (௲௬௰௨)
—மு. கருணாநிதி

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.   (௲௬௰௩ - 1063)
 

வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை (௲௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை. (௲௬௰௩)
—மு. வரதராசன்

இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை. (௲௬௰௩)
—சாலமன் பாப்பையா

வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை (௲௬௰௩)
—மு. கருணாநிதி

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.   (௲௬௰௪ - 1064)
 

நுகர் பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும், பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது (௲௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும். (௲௬௰௪)
—மு. வரதராசன்

ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது. (௲௬௰௪)
—சாலமன் பாப்பையா

வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது (௲௬௰௪)
—மு. கருணாநிதி

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.   (௲௬௰௫ - 1065)
 

நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப் போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும், அதனை உண்பதை விட இனியது வேறு யாதும் இல்லை (௲௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. (௲௬௰௫)
—மு. வரதராசன்

நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை. (௲௬௰௫)
—சாலமன் பாப்பையா

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை (௲௬௰௫)
—மு. கருணாநிதி

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.   (௲௬௰௬ - 1066)
 

வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு ‘நீர் தருவீராக’ என்று இரந்தாலும், அதனைப் போல நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை (௲௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை. (௲௬௰௬)
—மு. வரதராசன்

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை. (௲௬௰௬)
—சாலமன் பாப்பையா

தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை (௲௬௰௬)
—மு. கருணாநிதி

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.   (௲௬௰௭ - 1067)
 

‘உமக்கு இரக்க வேண்டுமானால், உள்ளதை ஒளிக்காமல் மறைப்பவரிடம் சென்று இரக்காதீர்கள்’ என்று இரப்பவரை எல்லாம் யான் இரந்து வேண்டுகின்றேன் (௲௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன். (௲௬௰௭)
—மு. வரதராசன்

பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன். (௲௬௰௭)
—சாலமன் பாப்பையா

கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன் (௲௬௰௭)
—மு. கருணாநிதி

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.   (௲௬௰௮ - 1068)
 

வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும் போது, இடையிலே கரத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும் (௲௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும். (௲௬௰௮)
—மு. வரதராசன்

வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும். (௲௬௰௮)
—சாலமன் பாப்பையா

இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும் (௲௬௰௮)
—மு. கருணாநிதி

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.   (௲௬௰௯ - 1069)
 

இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும்; அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால், அந்த உருக்கமும் காய்ந்து போகும் (௲௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும். (௲௬௰௯)
—மு. வரதராசன்

பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும். (௲௬௰௯)
—சாலமன் பாப்பையா

இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது (௲௬௰௯)
—மு. கருணாநிதி

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.   (௲௭௰ - 1070)
 

ஒளிப்பவர் ‘இல்லை’ என்று சொன்னதுமே, இரப்பவர் உயிர் போய்விடுகின்றது; ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ! (௲௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ. (௲௭௰)
—மு. வரதராசன்

இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது? (௲௭௰)
—சாலமன் பாப்பையா

இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ? (௲௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஜோன்புரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
இரந்தும் உயிர் வாழ்வதா?
இரவச்சம் சூழ்வதா?

அநுபல்லவி:
இறைவா நின் படைப்பில் இந்த
இழி நிலையும் காண்பதா

சரணம்:
கரவாமல் உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடிபெரும் என்றே அறிந்த பின்னும்

மானம் கெடுமோ என்று மனத்தினில் அச்சம் கொண்டு
தானத்திலே இரங்கி ஈனத்தை ஏற்க நின்று

வாழும் வழியற்றாலும் சூழும் நிலை கெட்டாலும்
தாழும்படி இரவாச் சால்பே உலகின் மேலாம்

பாவிகளைப் புகழ்ந்து பாடியும் பயன் என்னவோ
ஆவிற்கு நீர் என்றாலும் நாவிற்கிழி வல்லவோ

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியதில் வெனும் குறள் உணர்ந்தும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22