இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.   (௯௰௧ - 91)
 

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும் (௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். (௯௰௧)
—மு. வரதராசன்

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல். (௯௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும் (௯௰௧)
—மு. கருணாநிதி

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.   (௯௰௨ - 92)
 

முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும் (௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும். (௯௰௨)
—மு. வரதராசன்

முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது (௯௰௨)
—சாலமன் பாப்பையா

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும் (௯௰௨)
—மு. கருணாநிதி

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.   (௯௰௩ - 93)
 

முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும் (௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும். (௯௰௩)
—மு. வரதராசன்

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும். (௯௰௩)
—சாலமன் பாப்பையா

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும் (௯௰௩)
—மு. கருணாநிதி

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.   (௯௰௪ - 94)
 

எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும் (௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும். (௯௰௪)
—மு. வரதராசன்

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது. (௯௰௪)
—சாலமன் பாப்பையா

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை (௯௰௪)
—மு. கருணாநிதி

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.   (௯௰௫ - 95)
 

பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா (௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல. (௯௰௫)
—மு. வரதராசன்

தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா (௯௰௫)
—சாலமன் பாப்பையா

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது (௯௰௫)
—மு. கருணாநிதி

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.   (௯௰௬ - 96)
 

நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும் (௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். (௯௰௬)
—மு. வரதராசன்

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும். (௯௰௬)
—சாலமன் பாப்பையா

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும் (௯௰௬)
—மு. கருணாநிதி

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.   (௯௰௭ - 97)
 

பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும் (௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும். (௯௰௭)
—மு. வரதராசன்

பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும். (௯௰௭)
—சாலமன் பாப்பையா

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும் (௯௰௭)
—மு. கருணாநிதி

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.   (௯௰௮ - 98)
 

சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும் (௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் . (௯௰௮)
—மு. வரதராசன்

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். (௯௰௮)
—சாலமன் பாப்பையா

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும் (௯௰௮)
—மு. கருணாநிதி

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.   (௯௰௯ - 99)
 

இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ? (௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ? (௯௰௯)
—மு. வரதராசன்

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ? (௯௰௯)
—சாலமன் பாப்பையா

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? (௯௰௯)
—மு. கருணாநிதி

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   ( - 100)
 

இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே! (௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது . (௱)
—மு. வரதராசன்

மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும். (௱)
—சாலமன் பாப்பையா

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும் (௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கரகரப்பிரியா  |  தாளம்: ஆதி
பல்லவி:
இனியவை கூறின் இதம்பெறலாம்
இதை நீ மறவாதே மனமே

அநுபல்லவி:
கனியாம் இன்சொல் காயாம் வன்சொல்
கருத்தினிலே இதை
நிறுத்திக்கொள்வாய் என்றும்

சரணம்:
அன்பு கலந்து நன்கு அமைவதே இன்சொற்கள்
அல்லாத மற்றவைகள் ஆகுமே வெறும் கற்கள்
இன்புறவே எவர்க்கும் இனியசொல்லை வழங்கின்
ஈகையினும் உயரும் ஏழ்மைத்துன்பம் அகலும்

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப்பிற" என்னும் குறள் பயில்வாய்
தனியதன் சுவையே தமிழ்போல் இனிக்கும்
தன்னுணர்வைப் பெருக்கும் நன்னிலையில் உயர்த்தும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22