குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.   (௯௱௫௰௧ - 951)
 

செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை (௯௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. (௯௱௫௰௧)
—மு. வரதராசன்

சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா. (௯௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது (௯௱௫௰௧)
—மு. கருணாநிதி

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.   (௯௱௫௰௨ - 952)
 

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒரு போதுமே தவறமாட்டார்கள் (௯௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர். (௯௱௫௰௨)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார். (௯௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள் (௯௱௫௰௨)
—மு. கருணாநிதி

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.   (௯௱௫௰௩ - 953)
 

எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம் (௯௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர். (௯௱௫௰௩)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம். (௯௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும் (௯௱௫௰௩)
—மு. கருணாநிதி

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.   (௯௱௫௰௪ - 954)
 

பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள் (௯௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. (௯௱௫௰௪)
—மு. வரதராசன்

கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார். (௯௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள் (௯௱௫௰௪)
—மு. கருணாநிதி

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.   (௯௱௫௰௫ - 955)
 

தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கிய போதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள் (௯௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை. (௯௱௫௰௫)
—மு. வரதராசன்

தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார். (௯௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள் (௯௱௫௰௫)
—மு. கருணாநிதி

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.   (௯௱௫௰௬ - 956)
 

‘வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம்’ என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்ய மாட்டார்கள் (௯௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார். (௯௱௫௰௬)
—மு. வரதராசன்

குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார். (௯௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள் (௯௱௫௰௬)
—மு. கருணாநிதி

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.   (௯௱௫௰௭ - 957)
 

உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும் (௯௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும். (௯௱௫௰௭)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும். (௯௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும் (௯௱௫௰௭)
—மு. கருணாநிதி

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.   (௯௱௫௰௮ - 958)
 

குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக் குடிப்பிறப்பு உடையவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும் (௯௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும். (௯௱௫௰௮)
—மு. வரதராசன்

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும். (௯௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும் (௯௱௫௰௮)
—மு. கருணாநிதி

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.   (௯௱௫௰௯ - 959)
 

நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும் (௯௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும். (௯௱௫௰௯)
—மு. வரதராசன்

நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும். (௯௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம் (௯௱௫௰௯)
—மு. கருணாநிதி

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.   (௯௱௬௰ - 960)
 

ஒருவன், தனக்கு நன்மைகளை விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும்; குலனுடைமையை விரும்பினால், பணிவோடு நடத்தல் வேண்டும் (௯௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும். (௯௱௬௰)
—மு. வரதராசன்

ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும். (௯௱௬௰)
—சாலமன் பாப்பையா

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும் (௯௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சக்கரவாகம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை - இது
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை
ஒப்புரவாண்மையுடன் செப்பமும் நாணும் கொண்ட

அநுபல்லவி:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார் என்று செல்லும் பொருள் நன்று காணும் குறள்

சரணம்:
மேலும் மேலும் துன்பம் வந்தாலும் வீழ்ச்சில்லார்
விண்ணில் உலாவும் மதி தன்னிலும் மேன்மையுள்ளார்
பாலும் கரும்பும் பொன்னும் சந்தனமும் போல்வார்
பண்பினோடு பழம் பெருமை வாய்ந்த குடி
வண்மை ஏழ்மையிலும் நீங்கிடாத படி

தொகையாகவே அடுக்கி ஒரு கோடி தந்தாலும்
தோன்றும் தன் குடிக்கென்றும் குன்றுவ செய்தல்இலர்
நகை ஈகை இன்சொல் இகழாமையே போற்றுவார்
நலம் விளங்கிடவும் குலம் விளங்கிடவும்
நாணயத்தினுடன் நல்லடக்கம் மிகும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22