குறிப்பறிவுறுத்தல்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.   (௲௨௱௭௰௧ - 1271)
 

நீதான் மறைந்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும் (௲௨௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது. (௲௨௱௭௰௧)
—மு. வரதராசன்

நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு. (௲௨௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல் (௲௨௱௭௰௧)
—மு. கருணாநிதி

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.   (௲௨௱௭௰௨ - 1272)
 

கண் நிறைந்த பேரழகும், மூங்கில் போலும் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு, பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாக உள்ளது (௲௨௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது. (௲௨௱௭௰௨)
—மு. வரதராசன்

என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது. (௲௨௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும் (௲௨௱௭௰௨)
—மு. கருணாநிதி

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.   (௲௨௱௭௰௩ - 1273)
 

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப் போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது (௲௨௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது. (௲௨௱௭௰௩)
—மு. வரதராசன்

கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு. (௲௨௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது (௲௨௱௭௰௩)
—மு. கருணாநிதி

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.   (௲௨௱௭௰௪ - 1274)
 

அரும்பினுள்ளே அடங்கியிருக்கின்ற மணத்தைப் போல, என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின் குறிப்பும் ஒன்று உள்ளது (௲௨௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது. (௲௨௱௭௰௪)
—மு. வரதராசன்

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது. (௲௨௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது (௲௨௱௭௰௪)
—மு. கருணாநிதி

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.   (௲௨௱௭௰௫ - 1275)
 

செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது (௲௨௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது. (௲௨௱௭௰௫)
—மு. வரதராசன்

நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு. (௲௨௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது (௲௨௱௭௰௫)
—மு. கருணாநிதி

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.   (௲௨௱௭௰௬ - 1276)
 

பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும் (௲௨௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும். (௲௨௱௭௰௬)
—மு. வரதராசன்

அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது. (௲௨௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே (௲௨௱௭௰௬)
—மு. கருணாநிதி

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.   (௲௨௱௭௰௭ - 1277)
 

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும், நம் கைவளையல்கள் முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே! (௲௨௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே! (௲௨௱௭௰௭)
—மு. வரதராசன்

குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன. (௲௨௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்! (௲௨௱௭௰௭)
—மு. கருணாநிதி

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.   (௲௨௱௭௰௮ - 1278)
 

நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர்; யாமும், அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே! (௲௨௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம். (௲௨௱௭௰௮)
—மு. வரதராசன்

என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன. (௲௨௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே (௲௨௱௭௰௮)
—மு. கருணாநிதி

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.   (௲௨௱௭௰௯ - 1279)
 

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும் (௲௨௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும். (௲௨௱௭௰௯)
—மு. வரதராசன்

நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது. (௲௨௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான் (௲௨௱௭௰௯)
—மு. கருணாநிதி

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.   (௲௨௱௮௰ - 1280)
 

கண்ணினாலே காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண் தன்மைக்கு, மேலும் சிறந்த பெண் தன்மை உடையது என்று சொல்லுவர் (௲௨௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர். (௲௨௱௮௰)
—மு. வரதராசன்

பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர். (௲௨௱௮௰)
—சாலமன் பாப்பையா

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது (௲௨௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கர்நாடகதேவகாந்தாரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
கரப்பினும் கையிகந் தொல்லா - நின்உண்கண்
உரைக்க லுறுவ தொன்றே
உண்டெனும் குறளில் கண்டதும் புரிதல்

அநுபல்லவி:
சிறப்புறும் கண்ணிறைந்த காரிகை நீயே
சீர்பெறும் பெண்ணிறைந்த நீர்மை கொண்டாயே

சரணம்:
அழகு மணி மாலையுள் நூலென ஓடி
அரும்பும் இளநகையின் மலர் மணமாகி
பழகும் குறிப்பறி வுறுத்தலில் மேவி
பாவையோடு திருக்கோவையும் பயிற்றும்
ஆவலோடு தமிழ்க் காவிய மியற்றும்

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவென்னும் பண்ணினால்
தண்ணெனும் தாமரை முகத்தினள் எண்ணினால்
தாளும் தோளும் கைவளையாலும் நோக்கும்
தன்மை நன்மை வழி கொண்டென்னைச் சேர்க்கும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22