கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.   (௨௱௮௰௧ - 281)
 

உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும் (௨௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும். (௨௱௮௰௧)
—மு. வரதராசன்

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது. (௨௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும் (௨௱௮௰௧)
—மு. கருணாநிதி

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.   (௨௱௮௰௨ - 282)
 

‘பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம்’ என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவு கூடத் தீமையானதே (௨௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும். (௨௱௮௰௨)
—மு. வரதராசன்

அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது. (௨௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும் (௨௱௮௰௨)
—மு. கருணாநிதி

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.   (௨௱௮௰௩ - 283)
 

களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும் (௨௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும். (௨௱௮௰௩)
—மு. வரதராசன்

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும். (௨௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும் (௨௱௮௰௩)
—மு. கருணாநிதி

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.   (௨௱௮௰௪ - 284)
 

களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும் (௨௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும். (௨௱௮௰௪)
—மு. வரதராசன்

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும். (௨௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும் (௨௱௮௰௪)
—மு. கருணாநிதி

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.   (௨௱௮௰௫ - 285)
 

பொருள் தேடுதலையே நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை (௨௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை. (௨௱௮௰௫)
—மு. வரதராசன்

அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது. (௨௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது (௨௱௮௰௫)
—மு. கருணாநிதி

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.   (௨௱௮௰௬ - 286)
 

களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே (௨௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார். (௨௱௮௰௬)
—மு. வரதராசன்

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர். (௨௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள் (௨௱௮௰௬)
—மு. கருணாநிதி

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.   (௨௱௮௰௭ - 287)
 

‘களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும் (௨௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை. (௨௱௮௰௭)
—மு. வரதராசன்

உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது. (௨௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது (௨௱௮௰௭)
—மு. கருணாநிதி

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.   (௨௱௮௰௮ - 288)
 

அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே ‘அறம்’ நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே ‘வஞ்சகம்’ எப்போதும் நிலைத்திருக்கும் (௨௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும். (௨௱௮௰௮)
—மு. வரதராசன்

உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும். (௨௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும் (௨௱௮௰௮)
—மு. கருணாநிதி

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.   (௨௱௮௰௯ - 289)
 

களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர் (௨௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர். (௨௱௮௰௯)
—மு. வரதராசன்

அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார். (௨௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள் (௨௱௮௰௯)
—மு. கருணாநிதி

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.   (௨௱௯௰ - 290)
 

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது (௨௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது. (௨௱௯௰)
—மு. வரதராசன்

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது. (௨௱௯௰)
—சாலமன் பாப்பையா

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது (௨௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பேகடா  |  தாளம்: ஆதி
பல்லவி:
கூடா ஒழுக்கத்துடன் கூடும் களவு தன்னைக்
கூடவும் கூடாதே நண்பா

அநுபல்லவி:
கேடாகும் களவின் கண் கிளைத்திடும் காதலால்
கிட்டும் பயன் நுகர்ந்தால்
ஓட்டும் நம்மைத் துன்பமே

சரணம்:
"களவினா லாகிய ஆக்கம் அளவிறந்து
வளர்வது போலக்கெடும்" என்னும் உண்மை அறிந்து
அளவின்கண் நின்றொழுகும் ஆற்றல் மிகப் பெறுவாய்
அன்பருள் சார்ந்து நின்றே துன்பமெல்லாம் தவிர்வாய்

பஞ்சப் பிணிகள்பல பயமுறுத்த வந்தாலும்
பார்ததுன்னைத் தண்டிப்பவர் யாருமில்லை என்றாலும்
வஞ்சித்து வாழும் எண்ணம் நெஞ்சத்திலும் கொள்ளாதே
வள்ளுவர் சொல்லும் நல்லவழி இது தவறாதே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22