சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.   (௯௱௩௰௧ - 931)
 

தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம் (௯௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது. (௯௱௩௰௧)
—மு. வரதராசன்

வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம். (௯௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும் (௯௱௩௰௧)
—மு. கருணாநிதி

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.   (௯௱௩௰௨ - 932)
 

பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ? (௯௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ. (௯௱௩௰௨)
—மு. வரதராசன்

ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ? (௯௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? (௯௱௩௰௨)
—மு. கருணாநிதி

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.   (௯௱௩௰௩ - 933)
 

உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்துவிடும் (௯௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும். (௯௱௩௰௩)
—மு. வரதராசன்

சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும். (௯௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும் (௯௱௩௰௩)
—மு. கருணாநிதி

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.   (௯௱௩௰௪ - 934)
 

தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை (௯௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. (௯௱௩௰௪)
—மு. வரதராசன்

துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை. (௯௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை (௯௱௩௰௪)
—மு. கருணாநிதி

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   (௯௱௩௰௫ - 935)
 

முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், சுவற்றினையும், அ·தாடும் களத்தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே (௯௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார். (௯௱௩௰௫)
—மு. வரதராசன்

சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு. (௯௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள் (௯௱௩௰௫)
—மு. கருணாநிதி

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.   (௯௱௩௰௬ - 936)
 

சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள் (௯௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர். (௯௱௩௰௬)
—மு. வரதராசன்

சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர். (௯௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள் (௯௱௩௰௬)
—மு. கருணாநிதி

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.   (௯௱௩௰௭ - 937)
 

நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது, தொன்று தொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்துவிடும் (௯௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். (௯௱௩௰௭)
—மு. வரதராசன்

சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும். (௯௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும் (௯௱௩௰௭)
—மு. கருணாநிதி

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.   (௯௱௩௰௮ - 938)
 

பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது, ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும் (௯௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும். (௯௱௩௰௮)
—மு. வரதராசன்

சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும். (௯௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது (௯௱௩௰௮)
—மு. கருணாநிதி

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.   (௯௱௩௰௯ - 939)
 

சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும் (௯௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும். (௯௱௩௰௯)
—மு. வரதராசன்

சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா. (௯௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும் (௯௱௩௰௯)
—மு. கருணாநிதி

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.   (௯௱௪௰ - 940)
 

இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும் (௯௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும். (௯௱௪௰)
—மு. வரதராசன்

துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும். (௯௱௪௰)
—சாலமன் பாப்பையா

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான் (௯௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஸ்ரீ ரஞ்சனி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
சூதினும் வறுமை தருவதொன்றில்லை - ஒரு
சுகமும் இல்லை துன்ப எல்லை

அநுபல்லவி:
தீதிதுவும் பொது மாதும் மதுவும் போல்
சிறுமை பல செய்து சீரழித்திடும்

சரணம்:
பகடை பன்னிரன்டு பாய்ச்சிகை உருண்டு
பாயும் தாயம் சீட்டாடுவார்
பண்பும் அற்றிட நண்பும் கெட்டிட
பணயம் வைத்திடக் கூடுவார்
மிகவும் ஒன்றெய்தி நூறிழப் பினும்
மீளும் நல்வழி காண்பரோ
மீண்டும் மீண்டுமே பொருளிழப்பார்
தூண்டில் மீன்களாய்ப் பரதவிப்பார்

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்
கல்வி உணவுடைச் செல்வம் புகழ் நிறை
கருதும் ஐந்துமே அடைந்திடார்
அவல நிலையிலோர் கவளமாகிலும்
அருந்தியே பசி ஆறிடார்
ஆதலால் இந்தச் சூதின்மேல் வைத்த
ஆசையற விடுவீர்
குறளைத் தொடுவீர்
அருளைப் பெறுவீர்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22