வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.   (௱௭௰௧ - 171)
 

நடுவுநிலைமை இல்லாமல், பிறரது நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும் (௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். (௱௭௰௧)
—மு. வரதராசன்

பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும். (௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும் (௱௭௰௧)
—மு. கருணாநிதி

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.   (௱௭௰௨ - 172)
 

நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யவோ மாட்டார்கள் (௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார். (௱௭௰௨)
—மு. வரதராசன்

பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார். (௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார் (௱௭௰௨)
—மு. கருணாநிதி

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.   (௱௭௰௩ - 173)
 

நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்பமாட்டார்கள் (௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார். (௱௭௰௩)
—மு. வரதராசன்

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார். (௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார் (௱௭௰௩)
—மு. கருணாநிதி

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.   (௱௭௰௪ - 174)
 

ஐம்புலன்களையும் வென்ற குறை இல்லாத அறிவாளர்கள், ‘யாம் பொருளில்லாதேம்’ என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள் (௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌. (௱௭௰௪)
—மு. வரதராசன்

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார். (௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார் (௱௭௰௪)
—மு. கருணாநிதி

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.   (௱௭௰௫ - 175)
 

ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை (௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன? (௱௭௰௫)
—மு. வரதராசன்

பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன? (௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? (௱௭௰௫)
—மு. கருணாநிதி

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.   (௱௭௰௬ - 176)
 

அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய்விடுவான் (௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். (௱௭௰௬)
—மு. வரதராசன்

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான். (௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும் (௱௭௰௬)
—மு. கருணாநிதி

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.   (௱௭௰௭ - 177)
 

பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்ப வேண்டாம்; செயல் அளவில் அதன் பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும் (௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும். (௱௭௰௭)
—மு. வரதராசன்

பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா. (௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது (௱௭௰௭)
—மு. கருணாநிதி

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்   (௱௭௰௮ - 178)
 

ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும் (௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும். (௱௭௰௮)
—மு. வரதராசன்

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே. (௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும் (௱௭௰௮)
—மு. கருணாநிதி

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.   (௱௭௰௯ - 179)
 

அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை, திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள் (௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள். (௱௭௰௯)
—மு. வரதராசன்

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள். (௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும் (௱௭௰௯)
—மு. கருணாநிதி

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.   (௱௮௰ - 180)
 

வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும் (௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும். (௱௮௰)
—மு. வரதராசன்

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌. (௱௮௰)
—சாலமன் பாப்பையா

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும் (௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கேதாரே கௌளம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
மற்றவர்பொருள் மேல் இத்தனை மோகம் கொண்டு
மதி தடுமாறுவதேன் மனமே!

அநுபல்லவி:
உற்றநின் வாழ்க்கையில் ஒருவர் பொருள் கவர்ந்தே
உயிர்வாழ நினைப்பதும் உனக்குப் பெருமையோ சொல்

சரணம்:
"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்தங்கே திரு" என்றே வள்ளுவர் கூறும்
சிறந்த மொழி இதை உன் சிந்தையில் பதிப்பாய்
தீயதாம் பிறர் பொருள் ஆசையை அறுப்பாய்"

ஊரார் உழைப்பைக்கொள்ள ஓயாத நினைப்பு
உரிமை இல்லாததில் உனக்கென்ன முனைப்பு
நேராக விளங்கிடும் நீதியின் தொகுப்பு
நீ பயில்வாய் முன்னே திருக்குறள் வகுப்பு




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22