Raga: சாரங்கா | Tala: ஆதி பல்லவி:அம்பை விட்டு பால் கறப்பதா?
ஆகா தென்றாலும்
அஞ்சிட வெங்கோல் பிடிப்பதா?
அநுபல்லவி:அம்பெதற்குக் கன்றை விட்டால்
பால் கெடுக்கும் தானே
அச்ச மின்றி மக்கள் வாழ
அன்பு செய்வீர் கோனே
சரணம்:மண் குதிரையை நம்பி ஆற்றினில் இறங்கும்
மதிகெட்ட சேவகரால் எதுதான் துலங்கும்?
கண்கெட்ட பின்னரோ கதிரவன் வணக்கம்
கருதும் வெம்போர் வருமுன் காப்பதே இணக்கம்
தான் செய்த குற்றத்திற்குப் பிறரையே கடிந்தும்
தன்மையிலாக் கொடிய பேயெனத் திரிந்தும்
கோன் வெருவந்த செய்யின்குடிகள் உளம் துடிக்கும்
குமுறும் எரிமலையாய் ஒரு நாளது வெடிக்கும்
கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் நெடுஞ் செல்வம்
நீடின்றி யாங்கே கெடும் என்றே குறளும் சொல்லும்
படும் துன்பம் நீக்கும் முறைபார்த்தே மெல்ல எறிக
பண்புறும் கண்ணோட்டத்தின் பாங்கினையும் பெறுக