ஒருவர் நமக்குத் தெரிந்தவர் என்றாலும் அதிக பழக்கம் இல்லை. ஆனால் அவர் எந்த உதவியும் நம்மிடம் கேட்டதே இல்லை. நாமும் அவருக்கு செய்ததும் இல்லை. என்றாலும், தக்க சமயத்தில்- அவசரமான காரியத்துக்கு அவரே முன்வந்து தானாகவே நமக்கு ஒரு உதவி செய்து விட்டார்.
அப்படிப்பட்ட உதவி செய்த அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்வது? விண்ணுலகையும் மண்ணுலகையும் அவருக்கு கொடுத்தாலும் போதாது. அவர் செய்த உதவிக்கு இணையாகாது.
(உதவி என்பது பலவிதம்; அவசரமான சமயத்தில் பணம் தருவது; தேவையான நேரத்தில் ஒரு பொருளைத் தருவது; உடல் நலம் இல்லாத போது மருந்து அளிப்பது; பகைவரிடமிருந்து காப்பாற்றுவது; குழப்பமான சூழ்நிலையில் தெளிவான ஆலோசனை கூறுவது; உடல் உழைப்பின் மூலம் ஒத்துழைப்பது இவை போன்ற எல்லாமே உதவி ஆகும்.)