Raga: இந்தோளம் | Tala: ரூபகம் பல்லவி:மருந்து நல்ல மருந்து - திரு
வள்ளுவனார் தரும் செந்தமிழ் மருந்து
அநுபல்லவி:இருந்தொரு நூறாண்டும் வாழ்ந்திடச் செய்திடும்
இன்புற மாந்தர்கள் துன்பநோய் தீர்த்திடும்
சரணம்:"நோய் நாடி நோய்முதல்நாடி யது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்பதுவும் பணிக்கும்
தாய்போலும் அன்பு கொண்டு தாங்கிடவும் முன்னிற்கும்
தன்னளவைத் தானறிந்தே உண்ணும்விதம் கற்பிக்கும்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கென்னும் விதம் நண்ணின்
கூறும் வேறு மருந்ததும் வேண்டுமோ யாக்கைக்குக்
குன்றாத செல்வமதாய் அமைந்திடும் வாழ்க்கைக்கு