Raga: சுத்த தந்யாசி | Tala: ஆதி பல்லவி:பிறனில் விழையாதே - என்றும்
பெருமையை இழக்காதே - நண்பா
அநுபல்லவி:அறனில்லை இதில் ஆண்மைக்கழகே இல்லை
அன்போ சிறிதும் இல்லை துன்பங்களே தொடரும்
சரணம்:எத்தனை செல்வம் சீர் சிறப்பிருந்தாலும்
இவர் கனவான் என எவர் புகழ்ந்தாலும்
அத்தனையும் கெடுக்கும் அயல்மனை ஆசை
அகற்றிடு அகற்றிடு உன் மனமாசை
பகை பழிபாவம் அச்சத்தைக் கூட்டும்
பண்புள்ள நண்பரும் பதைத்திட வாட்டும்
தகைமை இல்லாதது தாழ்வு நிலையிது
தன்னுயிர்த் துணைவியைத் தவித்திடச் செய்வது
பிறன்மனை நோக்காப் பெயர் பெறும் ஆண்மை
பெற்றவனாவதில் உனக்குள்ள மேன்மை
திறன்மிக அறமும் நல்லொழுக்கமும் கூடும்
தீவினை உனை விட்டே தூரத்தில் ஓடும்