Raga: சாரமதி | Tala: ஆதி பல்லவி:இன்மையைத் தீர்க்கும் குடிப் பிறந்தோயே!
இரவும் இனிதாகவே இசை வளர்த்தாயே!
அநுபல்லவி:முன்பு வறுமைத் தீயில் மூழ்கி நொந்தோரை
அன்புடனே எடுத்தாய்
அரவணைத்தாய் காத்தாய்!
சரணம்:உண்ணவரும் வண்டினத்தின் வண்ணமலர்த் தேனாவாய்
ஊட்டவரும் கன்றுகட்கும் உள்ளமகிழ் தாய் போல்வாய்
எண்ணமெல்லாம் நிறையும் இரவலர் இன்பம் நீ
ஏற்றதும் துன்புறாமல் ஈந்தருளும் செல்வம் நீ
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தாற் போலெனும் குறள் கூறும்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப் பிடும்பை
எல்லாம் ஒருங்கே கெடும் நல்லாளின் பார்வை பெறும்