ஊடலுவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.   (௲௩௱௨௰௧ - 1321)
 

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும் (௲௩௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.   (௲௩௱௨௰௨ - 1322)
 

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும் (௲௩௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.   (௲௩௱௨௰௩ - 1323)
 

நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ! (௲௩௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.   (௲௩௱௨௰௪ - 1324)
 

காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது (௲௩௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.   (௲௩௱௨௰௫ - 1325)
 

தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது, உடலிலும் ஓர் இன்பம் உள்ளது (௲௩௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.   (௲௩௱௨௰௬ - 1326)
 

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தை விட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது! (௲௩௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.   (௲௩௱௨௰௭ - 1327)
 

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்தபின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும் (௲௩௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.   (௲௩௱௨௰௮ - 1328)
 

நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ? (௲௩௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.   (௲௩௱௨௰௯ - 1329)
 

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக! (௲௩௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.   (௲௩௱௩௰ - 1330)
 

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அ·து, அதனினும் மிகுந்த இன்பமாகும் (௲௩௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சங்கராபரணம்  |  தாளம்: ஆதி
பல்லவி (தலைவி):
இல்லை தவறவர்க்கே ஆயினும் ஊடுதல்
வல்லத வரளிக்கும் ஆறு நான் பெற்ற பெரும் பேறு

அநுபல்லவி (தலைவி):
எல்லையில் நின்றூடலில் தோன்றும் சிறு துணி
நல்லளி வாடினும் பாடு பெறும் என்தோழி

சரணம் (தலைவி):
நிலமும் நீரும் பொருந்திக் கலந்தது போலும் அன்பு
நிறைந்த என் காதலர்பால் உடுத்ற் கிணையு முண்டோ
நலம் பெறப் புல்லிவிடாப் புலவியுள் தோன்றுமே
நாயகி என்னுள்ளத்தை உடைக்கும் படையுமாமே

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மத்தியமாவதி  |  தாளம்: ஆதி
பல்லவி (தலைவன்):
ஊடல் உவகை கொண்டேனே
உணவினும் உண்டதறல் இனிதாகவே

அநுபல்லவி (தலைவன்):
ஊடலில் தோற்றவர் வென்ருர் அதுமன்னும்
கூடலில் காணப்படும் எனவே என்னும்

சரணம் (தலைவன்):
இன்னும் வேண்ட அவள் ஊடுதல் வேண்டும்
இரவு காலமும் நீடுதல் வேண்டும்
நன்னுதல் ஊடுதல் காமத்திற் கின்பம்
நாடும் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22