நெஞ்சோடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.   (௲௨௱௪௰௧ - 1241)
 

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்ல மாட்டாயோ? (௲௨௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௨ - 1242)
 

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும் (௲௨௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.   (௲௨௱௪௰௩ - 1243)
 

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே! (௲௨௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.   (௲௨௱௪௰௪ - 1244)
 

நெஞ்சமே! நீ அவரிடம் போகும் போது, இக்கண்களையும் அழைத்துப் போவாயாக! அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன (௲௨௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.   (௲௨௱௪௰௫ - 1245)
 

நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ? (௲௨௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௬ - 1246)
 

என் நெஞ்சமே! ஊடிய போது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டு தான் காய்கின்றாய்! (௲௨௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.   (௲௨௱௪௰௭ - 1247)
 

நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது (௲௨௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௮ - 1248)
 

என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை! (௲௨௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௯ - 1249)
 

என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்துக்குள்ளேயே இருப்பவராகவும், நீதான் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ? (௲௨௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.   (௲௨௱௫௰ - 1250)
 

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சிலேயே உடையவராய் நாம் இருக்கும் போது, இன்னும், நாம் அழகிழந்து வருகின்றோமே! (௲௨௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பேகடா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
நினைத் தொன்று சொல்லாயோ - நெஞ்சே
நினைத் தொன்று சொல்லாயோ

அநுபல்லவி:
துணை நினையன்றி யாரை நான் தேடுவேன்
துஞ்சாத நெஞ்சோடு கிளத்தலைப் பாடுவேன்

சரணம்:
ஆதரவில்லாரை ஏனோ நினைக்கின்றாய்
பேதமையால் நெஞ்சே தேடித் திகைக்கின்றாய்
காதலை விடு ஒன்றா நாணத்தை விட்டிடு
கருதும் இவ்விரண்டையும் நான் தாங்க முடியாது

கலந்துணர்த்தும் விதம் காதலர் வரக் கண்டால்
காணாமற் போவாயா வீணாக நிற்பாயா
புலந்துணராய் ஏனோ பொய்க் காய்வு காய்வது
புதுவெள்ளம் போலவர் வந்திட்டால் பாய்வது
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22