நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.   (௲௨௱௧ - 1201)
 

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும் (௲௨௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.   (௲௨௱௨ - 1202)
 

யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும் ஒருவகையில் இனிமையானதே! (௲௨௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.   (௲௨௱௩ - 1203)
 

தும்மல் எழுவது போலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே! அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ! (௲௨௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.   (௲௨௱௪ - 1204)
 

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ? (௲௨௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.   (௲௨௱௫ - 1205)
 

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ? (௲௨௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.   (௲௨௱௬ - 1206)
 

காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்? (௲௨௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.   (௲௨௱௭ - 1207)
 

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! (௲௨௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.   (௲௨௱௮ - 1208)
 

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என்மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்! (௲௨௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.   (௲௨௱௯ - 1209)
 

‘நாம் இருவரும் வேறானவர் அல்லேம்’ என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே (௲௨௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.   (௲௨௱௰ - 1210)
 

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும் வானத்தில் மறையாமல் இருப்பாயாக! (௲௨௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: புன்னாகவராளி  |  தாளம்: ஆதி
தலைவன்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது - நண்பா
கள்ளினும் காமம் இனிது

அள்ளி அணைத்தாள் இன்பம் அழகு மயிலாள் இன்பம்
அத்தனையும் நினைப்பில் ஆழப்பதிந்த இன்பம்

தலைவி:
கள்ளினும் காமம் இனிது - தோழி
காணாத நாளும் கொடிது

உள்ளத்தில் உள்ளவர்பால் நானும் உள்ளேனோ
உயிரும் உடலும் ஆனோம் என்ற சொல் வீணோ

கொஞ்சும் கிளியே என்றார் குயிலே மயிலே என்றார்
குலவியே எனை அணைந்தார்
கூடிய நாளை எண்ணின் வாடிய என்னுள்ளமும்
குளிர்ந்து மெய் சிலிர்க்குதடி
அஞ்சல் என்று சொன்னவர்தான் நெஞ்சில் இடம் கொண்டவர்தான்
ஆனாலும் எனைப் பிரிந்தார்
அன்னவரைக் கண்ணெதிரில் காணும் வரை தண்மதியே
அகலா திருக்க நீ வாழியவே

இருவரும்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

தலைவி:
நினைத்தவர் போன்று நினையார் கொல் தும்மல்
சினப்பது போன்று கெடும்

தலைவன்:
நீரினுள் மூழ்கினும் நீலக் குன்றெறினும்
நேரிழை பிரிவு சுடும்

தலைவி:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தும்
காதலர் செய்யும் சிறப்பு

தலைவன்:
இன்னலை நீக்கும் அந்தக் கன்னலை எண்ணும்தொறும்
என்னுள்ள மெல்லாம் இனிப்பு
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22