கண்விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.   (௲௱௭௰௧ - 1171)
 

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ? (௲௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.   (௲௱௭௰௨ - 1172)
 

மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ? (௲௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.   (௲௱௭௰௩ - 1173)
 

அன்று, தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், நம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினையே உடையதாகும் (௲௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.   (௲௱௭௰௪ - 1174)
 

அன்று, யான் உய்யாத அளவு தீராத காமநோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டு விட்டனவே! (௲௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.   (௲௱௭௰௫ - 1175)
 

கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன (௲௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.   (௲௱௭௰௬ - 1176)
 

எமக்கு இத்தகைய காமநோயைச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது, காண்பதற்கு மிகவும் இனியதாகும் (௲௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.   (௲௱௭௰௭ - 1177)
 

விரும்பி உள் நெகிழ்ந்துவிடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக! (௲௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.   (௲௱௭௰௮ - 1178)
 

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே! (௲௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.   (௲௱௭௰௯ - 1179)
 

காதலர் வராத போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன! (௲௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.   (௲௱௮௰ - 1180)
 

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும் (௲௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சண்முகப்பிரியா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
கண்தாம் கலுழ்வ தெவன் கொலோ
தண்டா நோய் தாம்காட்ட யாம் கண்டது

அநுபல்லவி:
முன்னால் அவர்முகம் பார்த்ததும் முறுவல்கொண்டு சேர்த்ததுவும்
உன்னாலே நேர்ந்த தன்றோ
என்னால் ஒரு பிழையும் உண்டோ

சரணம்:
செயலாற்றும் வகையும் மறந்து சிந்தை வருந்துதே
சிந்துகின்ற கண்ணீரதும் கரைபுரண்டதே
பெயலாற்றா நீருலந்து போனதே உண்கண்
உயலாற்றா உய்வில் நோயை நிறுத்துதே என்முன்

வாராத போதும் கண்கள் வழி பார்த்திருக்கும்
வந்த போதும் பிரிவஞ்சியே துயிலாதிருக்கும்
தீராத துன்பம் இவற்றால் வருந்தும் என் கண்ணே
ஊராரும் தெரிந்து கொள்ள அறை பறை என்னே!
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22