நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.   (௲௱௩௰௧ - 1131)
 

காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, ‘மடலேறுதல்’ அல்லாமல், வேறு யாதும் இல்லை (௲௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.   (௲௱௩௰௨ - 1132)
 

காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன (௲௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.   (௲௱௩௰௩ - 1133)
 

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன் (௲௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.   (௲௱௩௰௪ - 1134)
 

நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்! (௲௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.   (௲௱௩௰௫ - 1135)
 

தொடர்பான குறுவளையல்களை அணிந்த இவள் தான், மாலைப் பொழுதிலே வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் எனக்கு தந்துவிட்டாளே! (௲௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.   (௲௱௩௰௬ - 1136)
 

அப் பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒரு போதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளையிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்! (௲௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.   (௲௱௩௰௭ - 1137)
 

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை (௲௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௱௩௰௮ - 1138)
 

‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே! (௲௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.   (௲௱௩௰௯ - 1139)
 

பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்! (௲௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.   (௲௱௪௰ - 1140)
 

யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர் (௲௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பைரவி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி என்று கூறும்

அநுபல்லவி:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணையதும் தன்னோடு

சரணம்:
பூம்பட்டு மேனி தொடலைக் குறுந் தொடியிவளே
புணர்ந்தும் பிரிந்தும் மாலை வருத்தும் துயரைச் செய்தாளே
யாம்பட்டது தாம்படாத வாறதனாலே
யாங்கண்ணின் காண நகுப அறிவிலார்களே

மடலூர் தலையாமத்திலும் உள்ளுகின்றேனே
படல் ஒல்லா பேதைக் கென்றன் கண்ணும் உறங்கேனே
கடலன்ன காம நோயால் தான் உழன்றாலும்
மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கதும் உண்டோ
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22