குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.   (௲௯௰௧ - 1091)
 

இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய்செய்யும் பார்வை; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை (௲௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.   (௲௯௰௨ - 1092)
 

என்னை அறியாமல் என் மேல் நோக்குகின்ற இவள் அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம் ஆவதன்று; அதனிலும் மிகுதியானது ஆகும் (௲௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.   (௲௯௰௩ - 1093)
 

அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள் போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு, எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று (௲௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.   (௲௯௰௪ - 1094)
 

யான் தன்னைப் பாராத போது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள்; யான் பார்க்கும் பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்! (௲௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.   (௲௯௰௫ - 1095)
 

என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள்! (௲௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.   (௲௯௰௬ - 1096)
 

புறத்தே நம்மை விரும்பாதவரைப் போலச் சொன்னாரானாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும் (௲௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.   (௲௯௰௭ - 1097)
 

நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும், சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும், அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன (௲௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.   (௲௯௰௮ - 1098)
 

அவளை இரப்பது போல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு (௲௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.   (௲௯௰௯ - 1099)
 

முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொது நோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும் (௲௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.   (௲௱ - 1100)
 

காமத்திற்கு உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை (௲௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கானடா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
இரு நோக்கிவள் உண் கண்ணுள்ளது
ஈடில்லாத பெருமை கொள்வது

அநுபல்லவி:
ஒரு நோக்கு நோய் நோக்காய் உடலிற் பாய்ந்திடும்
ஒன்றந்த நோய் தீர்க்கும் மருந்தாய் வந்து காத்திடும்

சரணம்:
மான் பிணைபோல் மருண்டு மருண்டு நோக்கும் பண்பினள்
மாசில்லாத காதற் பயிரை வளர்க்கும் அன்பினள்
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும் தாமரை முகத்தாள்

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது இந்த ஞாலத்தில்
கண்ணோடு கண்ணிணை நோக்க ஒப்பின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இலை எனவே இசைத்திடும் குறள்சொல்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22