இரவு

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.   (௲௫௰௧ - 1051)
 

தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை (௲௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.   (௲௫௰௨ - 1052)
 

ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும் (௲௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.   (௲௫௰௩ - 1053)
 

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று, அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும் (௲௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.   (௲௫௰௪ - 1054)
 

தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும் (௲௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.   (௲௫௰௫ - 1055)
 

முன்னால் நின்ற போதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர் (௲௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.   (௲௫௰௬ - 1056)
 

உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால், மானம் விடாமல் இரப்பவருக்கு, அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும் (௲௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.   (௲௫௰௭ - 1057)
 

தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து, உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு (௲௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.   (௲௫௰௮ - 1058)
 

வறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும் (௲௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.   (௲௫௰௯ - 1059)
 

தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாத போது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்! (௲௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.   (௲௬௰ - 1060)
 

இரப்பவன் ஒரு போதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும் (௲௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாரமதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
இன்மையைத் தீர்க்கும் குடிப் பிறந்தோயே!
இரவும் இனிதாகவே இசை வளர்த்தாயே!

அநுபல்லவி:
முன்பு வறுமைத் தீயில் மூழ்கி நொந்தோரை
அன்புடனே எடுத்தாய்
அரவணைத்தாய் காத்தாய்!

சரணம்:
உண்ணவரும் வண்டினத்தின் வண்ணமலர்த் தேனாவாய்
ஊட்டவரும் கன்றுகட்கும் உள்ளமகிழ் தாய் போல்வாய்
எண்ணமெல்லாம் நிறையும் இரவலர் இன்பம் நீ
ஏற்றதும் துன்புறாமல் ஈந்தருளும் செல்வம் நீ

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தாற் போலெனும் குறள் கூறும்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப் பிடும்பை
எல்லாம் ஒருங்கே கெடும் நல்லாளின் பார்வை பெறும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22