பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.   (௯௱௭௰௧ - 971)
 

ஒருவனுக்குப் பெருமை, ‘பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்’ என்னும் மனவூக்கமே; இழிவாவது, ‘அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்’ என்று நினைப்பதாகும் (௯௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.   (௯௱௭௰௨ - 972)
 

எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை (௯௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.   (௯௱௭௰௩ - 973)
 

செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார் (௯௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.   (௯௱௭௰௪ - 974)
 

கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும் (௯௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.   (௯௱௭௰௫ - 975)
 

பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர் (௯௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.   (௯௱௭௰௬ - 976)
 

‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது (௯௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.   (௯௱௭௰௭ - 977)
 

தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிரியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும் (௯௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.   (௯௱௭௰௮ - 978)
 

பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போது தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள் (௯௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.   (௯௱௭௰௯ - 979)
 

பெருமை குணம் ஆவது, காரணம் உள்ள போதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்ற போதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும் (௯௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.   (௯௱௮௰ - 980)
 

பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள் (௯௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கானடா  |  தாளம்: ஆதி
பல்லவி:
தோன்றும் குடிப் பெருமை - செய்யும்
தொழிலால் வரும் பெருமை உலகினில்

அநுபல்லவி:
ஈன்றதாய் நாட்டினில் எடுத்த தன் பிறவியில்
ஏற்ற முறவே செயல் ஆற்றும் பெரியோர்களால்

சரணம்:
செல்வமும் கல்வியும் சேர்ந்திடப் பெற்றாலும்
சிறியோர் பெரியோர்க்கிணை சேரார் எக்காலும்
நல்லவர் பெருமையை அறிகிலார் கீழோர்
நாளும் தன்னடக்கத்தால் நன்மை செய்வோர் மேலோர்

பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின்
அருமை உடைய செயல் எனும் குறள் பாட்டின்
ஒருமை மகளிர்போல் தம்மைத்தாம் காப்பார்
ஒளி ஒருவர்க்குள்ளதாம் வெறுக்கையும் சேர்ப்பார்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22