வரைவின் மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.   (௯௱௰௧ - 911)
 

அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும் (௯௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.   (௯௱௰௨ - 912)
 

ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக (௯௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று   (௯௱௰௩ - 913)
 

கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும் (௯௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.   (௯௱௰௪ - 914)
 

இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார் (௯௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.   (௯௱௰௫ - 915)
 

இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசைகாட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்டார் (௯௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.   (௯௱௰௬ - 916)
 

தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்டமாட்டார் (௯௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.   (௯௱௰௭ - 917)
 

நெஞ்சிலே பொருள் மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர் (௯௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.   (௯௱௰௮ - 918)
 

வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, ‘அணங்குத் தாக்கு’ என்று சொல்வார்கள் (௯௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.   (௯௱௰௯ - 919)
 

உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும் (௯௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.   (௯௱௨௰ - 920)
 

எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும் (௯௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சங்கராபரணம்  |  தாளம்: சாப்பு
பல்லவி:
வரைவின் மகளிர் நேசம் - எவர் கொண்டாலும்
வருமே கைப் பொருள் நாசம்

அநுபல்லவி:
கரையேற முடியாது கடமையும் புரியாது
காலமெல்லாம் அழுந்திக்கிடக்கும் கீழோர் நரகாம்

சரணம்:
சாயும் பொழுதைப் பார்ப்பார் - முகம்மினுக்கித்
தம்மை விற்றும் பொருள் சேர்ப்பார்
மாயமகளிர் இவர் வரிசை கொண்டழைத்தாலும்
ஆயும் நல்லறிவினர் அணுகாரே ஒருக்காலும்

பொருட் பெண்டிர்ப் பொய்மை முயக்கம் - இருட்டறையில்
புல்லும் பிணத்தை நிகர்க்கும்
"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் என்றும்
திருநீக்கப் பட்டவர் தொடர்" பென்றே குறள் சொல்லும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22