உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.   (௮௱௮௰௧ - 881)
 

நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும் (௮௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.   (௮௱௮௰௨ - 882)
 

வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும் (௮௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.   (௮௱௮௰௩ - 883)
 

உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்த போது, அவர்கள் கெடுதல் செய்வார்கள் (௮௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.   (௮௱௮௰௪ - 884)
 

உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும்; இல்லையானால், அ·து சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும் (௮௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.   (௮௱௮௰௫ - 885)
 

புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும் (௮௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.   (௮௱௮௰௬ - 886)
 

தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும் (௮௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௭ - 887)
 

செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள் (௮௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௮ - 888)
 

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும் (௮௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.   (௮௱௮௰௯ - 889)
 

ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும் (௮௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.   (௮௱௯௰ - 890)
 

மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும் (௮௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: லதாங்கி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
உட் பகைக்கே அஞ்சு வேண்டுமே - நம்
உயிரைக் காத்துக் கொள்ள வேண்டுமே

அநுபல்லவி:
எட் பகவன்ன சிறுமைத்தே ஆயினும்
உட் பகை உள்ளதாம் கேடுறும் நோயினும்

சரணம்:
இன்பம் தரும் நிழல் நீராயிருப்பினும்
துன்பநோய் தரும் என்றால் தொடுவாரோ எவரேனும்
வன்புள்ள உறவினர் தன்மையும் இதுவன்றோ
வாளினும் கொடியவர் கேளிர் எனல் நன்றோ

புடமிட்ட பொன்னையும் பொடியாக்கும் கருவிபோல்
புணரினும் கூடாத செப்பின் மேல் மூடிபோல்
உடம் பாடில்லாதவர் வாழ்க்கைக் குடங்கருள்
பாம்போடுடன் உறைந்தற்றே எனும் குறள்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22