பகைத்திறந் தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.   (௮௱௭௰௧ - 871)
 

‘பகை’ என்று கூறப்படும் தீமை தருவதனை, ஒருவன், விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது; இதுவே நீதி நூல்களில் முடிந்த முடிப்பாகும் (௮௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.   (௮௱௭௰௨ - 872)
 

வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது (௮௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.   (௮௱௭௰௩ - 873)
 

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான் (௮௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.   (௮௱௭௰௪ - 874)
 

தான் வேண்டும் போது, தன் பகைவருள் சிலரைப் பிரித்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித்திறனுடைய அரசனது பெருமையினுள்ளே, இவ்வுலகமே அடைங்கிவிடும் (௮௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.   (௮௱௭௰௫ - 875)
 

‘தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு’ என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும் (௮௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.   (௮௱௭௰௬ - 876)
 

பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து, அவரைக் கூடாதும் நீக்காதும், விட்டு வைக்க வேண்டும் (௮௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.   (௮௱௭௰௭ - 877)
 

தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம்; வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம் (௮௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.   (௮௱௭௰௮ - 878)
 

தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும் (௮௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.   (௮௱௭௰௯ - 879)
 

களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக; முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும் (௮௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.   (௮௱௮௰ - 880)
 

பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் (௮௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)


கிளிக்கண்ணி:
பண்பின் வழி நடக்கப் பகைவரின் செருக்கடக்க
நண்பர்கள் சூழ்ந்து நிற்க - கிளியே
நாடும் நம் குறளாட்சியே

வில்லே ருழவர் பகை கொள்ளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை - என்றே
சொல்லும் நல் லறிவுரையே

இளைதாகவே முள்மரம் இருந்தாலும் கொல்லவேண்டும்
விளையாட்டுக்கும் பகையை - கிளியே
விரும்புதல் கூடாதடி

இணையும் துணையோ இல்லை என்றாலும் பகை இரண்டால்
துணையதில் ஒன்றைக் கொண்டால் - கிளியே
தோல்வியே இல்லை கண்டாய்

பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் பெரும்
தகைமைக் கண் தங்கிற்றுலகு - கிளியே
தழைக்கவே பணி புரிவோம்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22