நட்பாராய்தல்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.   (௭௱௯௰௧ - 791)
 

நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை (௭௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.   (௭௱௯௰௨ - 792)
 

பலப்பல வகையாலும் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும் (௭௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.   (௭௱௯௰௩ - 793)
 

ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும் (௭௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.   (௭௱௯௰௪ - 794)
 

உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும் (௭௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.   (௭௱௯௰௫ - 795)
 

நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும் (௭௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.   (௭௱௯௰௬ - 796)
 

ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான் (௭௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.   (௭௱௯௰௭ - 797)
 

ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப்பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும் (௭௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.   (௭௱௯௰௮ - 798)
 

உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும் (௭௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.   (௭௱௯௰௯ - 799)
 

நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும் (௭௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.   (௮௱ - 800)
 

குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிடுதல் வேண்டும் (௮௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தோடி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
ஆய்ந்து பார்த்துக் கொள்ளவேண்டுமே - நட்பை
ஆய்ந்து பார்த்துக் கொள்ளவேண்டுமே

அநுபல்லவி:
ஆய்ந்தாய்ந்து பாராதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் என்றே நண்பரை

சரணம்:
கொடுத்தும் கொளல் வேண்டும் குடிப்பிறந்தார் நட்பு
குற்றமில்லாருடன் கூடுவதும் பெட்பு
இடித்தழச் சொல்லுவார் இணக்கமே நல்லது
இவ்வுலகின் நடை அறியவும் வல்லது

மாட்டியே துன்பத்தில் கைவிடு வோரே
மாய்த்திடும் கூற்றினும் துயரிழைப் போரே
கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் என்னும் தமிழ்மறை
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22