நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.   (௭௱௮௰௧ - 781)
 

நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை (௭௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.   (௭௱௮௰௨ - 782)
 

நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும் (௭௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.   (௭௱௮௰௩ - 783)
 

நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் (௭௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.   (௭௱௮௰௪ - 784)
 

நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும் (௭௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.   (௭௱௮௰௫ - 785)
 

நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும் (௭௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.   (௭௱௮௰௬ - 786)
 

உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.   (௭௱௮௰௭ - 787)
 

நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும் (௭௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.   (௭௱௮௰௮ - 788)
 

ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு (௭௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.   (௭௱௮௰௯ - 789)
 

‘நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?’ என்றால், மனவேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும் (௭௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.   (௭௱௯௰ - 790)
 

‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்’, ‘யாம் இவருக்கு இத்தன்மைவர்’ என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும் (௭௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: வாசஸ்பதி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
கைபோல் வந்தே உதவி செய்திடும் நட்பு
காலமறிந்தும் கடமை புரிந்தும்

அநுபல்லவி:
கைபோலவும் கண்போலவும்
கனிந்தும் துணிந்தும் விரைந்தும் பணிந்தும்

சரணம்:
புணர்ச்சியோடும் பழக வேண்டாம்
புனைந்துரைகளும் கூற வேண்டாம்
உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்
ஒளிதரும் பிறைமதி போலவும் வளரும்

நவில் தொறும் நூல் நயம் போலுமே
பயில் தொறும் பண்புடையார் தொடர்பாம்
புவி பெறும் குறள் நட்பதன் நிலையே
போதெல்லாம் உதவும் தீதெல்லாம் களையும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22