பொருள்செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.   (௭௱௫௰௧ - 751)
 

ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும்படியாகச் செய்யக் கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை (௭௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.   (௭௱௫௰௨ - 752)
 

பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள் (௭௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.   (௭௱௫௰௩ - 753)
 

‘பொருள்’ என்னும் நந்தா விளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும் (௭௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.   (௭௱௫௰௪ - 754)
 

தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும் (௭௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.   (௭௱௫௰௫ - 755)
 

‘அருள்’ என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டுவிட வேண்டும் (௭௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.   (௭௱௫௰௬ - 756)
 

உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும் (௭௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.   (௭௱௫௰௭ - 757)
 

‘அன்பு’ என்னும் தாய் பெற்றெடுத்த ‘அருள்’ என்னும் குழந்தையானது (௭௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.   (௭௱௫௰௮ - 758)
 

தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும் (௭௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.   (௭௱௫௰௯ - 759)
 

பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை (௭௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.   (௭௱௬௰ - 760)
 

சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும் (௭௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கௌரிமனோகரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பொருள் செயல் வகை யறிவோமே - அது
பொருந்தும் நல்ல வழியில்
போற்றிச் செய்வோமே

அநுபல்லவி:
"அருளொடும் அன்பொடும் வாராத பொருளாக்கம்
புல்லார் புரளவிடல்" எனும் குறள் மணி வாக்கும்

சரணம்:
குன்றேறி யானைப் போரைக் காண்பது போல
கொண்டதன் கைப்பொருளால் செயும் தொழிலாலே
என்றுமே உயர்வாகி இருட்பகையை அறுக்கும்
எண்ணிய தேய மெல்லாம் ஏற்றும் பொய்யா விளக்கும்

அன்பு பெற்ற குழந்தையாகும் நல்லருளே
அதை வளர்க்கும் செவிலித்தாயாகும் பொருளே
இன்பமும் நல்லறமும் தனக்கிரு பாலும்
எற்றிடவே உலகில் இருந்தர சாளும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22