அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.   (௭௱௪௰௧ - 741)
 

பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம் (௭௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.   (௭௱௪௰௨ - 742)
 

நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்! (௭௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.   (௭௱௪௰௩ - 743)
 

‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்’ என்று போரியல் நூல்கள் கூறும் (௭௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.   (௭௱௪௰௪ - 744)
 

காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்க வல்லதே நல்ல அரண் ஆகும் (௭௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.   (௭௱௪௰௫ - 745)
 

பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாயும், அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண் (௭௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.   (௭௱௪௰௬ - 746)
 

அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண் (௭௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.   (௭௱௪௰௭ - 747)
 

சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண்! (௭௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.   (௭௱௪௰௮ - 748)
 

வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றபடியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண் (௭௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.   (௭௱௪௰௯ - 749)
 

முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்! (௭௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.   (௭௱௫௰ - 750)
 

எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும் (௭௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: நாட்டை  |  தாளம்: ஆதி
பல்லவி:
உடைக்க முடியாத அரண் இதுதான் - மிக்க
உயரமும் அகலமும் உறுதியும் உள்ளது காண்

அநுபல்லவி:
படை எடுத்துப் போர் செய்யச்
செல்லுவோர் தமக்கும்
அடைக்கலமாய் வந்தோர்க்கும்
ஆதரவாகி நிற்கும்

சரணம்:
முற்றுகையிட்டுப் பலநாள் முயன்றாலும்
முறைகெட்டு வஞ்சனையால் கொள்ள நின்றாலும்
பற்றுக்கொண்டே தன்னாட்டின் படைபலம் காக்கும்
பகைவரின் ஊக்கமெல்லாம் அழிய முன் சாய்க்கும்

பணிசெய்யவே எல்லாப் பொருளையும் கொண்டது
பக்கத் துணையாய் நல்ல வீரரும் திரண்டது
"மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையதரண்" என்றிடும் திருக்குறள்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22