அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.   (௭௱௨௰௧ - 721)
 

சொற்களின் தொகை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய்சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள் (௭௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.   (௭௱௨௰௨ - 722)
 

‘கற்றவர்களுள் கற்றவர்’ என்று புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர் (௭௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.   (௭௱௨௰௩ - 723)
 

போர்க்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால், கற்றோர் அவையிலே சென்று பேசக் கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச் சிலரே! (௭௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.   (௭௱௨௰௪ - 724)
 

தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக் கொள்ளல் வேண்டும் (௭௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.   (௭௱௨௰௫ - 725)
 

அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும் (௭௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.   (௭௱௨௰௬ - 726)
 

அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை (௭௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.   (௭௱௨௰௭ - 727)
 

பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது (௭௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.   (௭௱௨௰௮ - 728)
 

நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே! (௭௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.   (௭௱௨௰௯ - 729)
 

தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர் (௭௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.   (௭௱௩௰ - 730)
 

அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள் (௭௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஆரபி  |  தாளம்: ஆதி
பல்லவி:
அவையஞ்சாமையே தனிச் சிறப்பாம்
அதுவே பேசுவோர் உடன் பிறப்பாம்

அநுபல்லவி:
அவையகத் தஞ்சாமல் பேசுவோர் சிலரே
பகையகத்துச் சாவார் பலர் அதனாலே

சரணம்:
ஓடி ஒளியும் பேடி கையில் கூர்வாளோ
உரை சொல்ல அஞ்சுமவன் படிக்கவும் நூலோ
தேடிட வேண்டுமோ இதன் பொருள் காணீர்!
தேறும் நல்லவையினில் பேசவும் முன் வாரீர்!

"வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்" எனும் குறளின்
தகைமிகும் கற்றவர்முன் செல்லவே சொல்லும்
தயங்காமல் கேள்விக் கெல்லாம் விடை தந்தே வெல்லும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22