அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.   (௬௱௩௰௧ - 631)
 

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.   (௬௱௩௰௨ - 632)
 

மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலன்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன் (௬௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.   (௬௱௩௰௩ - 633)
 

பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன் (௬௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.   (௬௱௩௰௪ - 634)
 

எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.   (௬௱௩௰௫ - 635)
 

நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய், இருப்பவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.   (௬௱௩௰௬ - 636)
 

இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும் (௬௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.   (௬௱௩௰௭ - 637)
 

செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும் (௬௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.   (௬௱௩௰௮ - 638)
 

அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும் (௬௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.   (௬௱௩௰௯ - 639)
 

அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம் (௬௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.   (௬௱௪௰ - 640)
 

முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள் (௬௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாரங்கி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
நல்ல பொருள் இயலே - ஆட்சி
நடத்தும் அமைச்சியலே

அநுபல்லவி:
சொல்லும் மதிநுட்பம் நூலோடும் பூத்திடும்
வெல்லும் பகையின்றி வேந்தரைக் காத்திடும்

சரணம்:
அறத்தை அறிந்து நிற்கும் - சொல்லை
ஆன்றமைந்தே உரைக்கும்
அறிவாண்மை குடிகாத்தல் - முயற்சி
ஐந்தணியால் சிறக்கும்

பிரித்தலும் காத்தலும்
பிரிந்தார்ப் பொருத்தலும்
திறத்தினிலே மன்னும்
தேர்ச்சித் துணை என்னும்

அறி கொன்றறியாமல் - நாட்டின்
அரசன் வெகுண்டாலும்
உறுதி உழையிருந்தான் - கூறல்
உண்மைக் கடனாகும்

கருவியும் காலமும்
செய்கையதும் செய்யும்
அரு வினையு மாண்ட
தமைச் செனக் குறள் சொல்லும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22