இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.   (௬௱௨௰௧ - 621)
 

துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை (௬௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.   (௬௱௨௰௨ - 622)
 

வெள்ளமாகப் பெருகிவருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்த போது, அவனை விட்டு மறைந்து போய்விடும் (௬௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.   (௬௱௨௰௩ - 623)
 

இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள் (௬௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.   (௬௱௨௰௪ - 624)
 

தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும் (௬௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.   (௬௱௨௰௫ - 625)
 

மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும் (௬௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.   (௬௱௨௰௬ - 626)
 

‘பொருள் அடைந்தோம்’ என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் ‘பொருளை இழந்தோம்’ என்று துன்பம் அடைவாரோ? (௬௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.   (௬௱௨௰௭ - 627)
 

இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள் (௬௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௮ - 628)
 

இன்பம் உண்டாகிய போது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான் (௬௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.   (௬௱௨௰௯ - 629)
 

இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான் (௬௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.   (௬௱௩௰ - 630)
 

துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான் (௬௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மத்தியமாவதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
இடுக்கண் வருங்கால் நகுக - மனமே
இடுக்கண் வருங்கால் நகுக
அடுத்தூர் வதும் அதனை
ஒப்பதில்லை அறிக

அநுபல்லவி:
அடுக்கியே வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் எனும் குறள்வழி நின்றே

சரணம்:
தடைப்பட்ட இடமெல்லாம் தயங்காமலே கடக்கும்
தன்னாற்றல் மிக்க இரு பகடுகள் போல் நடக்கும்
இடைவிடா முயற்சியை இதயம் நிறையக் கற்போம்
எதற்குமே அஞ்சிடாமல் இமயமலைபோல் நிற்போம்

தன்னாட்சியால் விளங்கும் நாட்டின் பொதுச் சேவை
தாங்கிட நிற்பவர்கள் சாலவும் தேவை
இன்னாமையே இன்பம் என்னும் அவர் பிறப்பு
ஒன்னாறாம் விழையவே உண்டாக்குமாம் சிறப்பு
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22