கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.   (௫௱௭௰௧ - 571)
 

‘கண்ணோட்டம்’ என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான் (௫௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.   (௫௱௭௰௨ - 572)
 

உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான் (௫௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.   (௫௱௭௰௩ - 573)
 

பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அது போலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை (௫௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.   (௫௱௭௰௪ - 574)
 

தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்? (௫௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.   (௫௱௭௰௫ - 575)
 

கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது ‘புண்’ என்றே சான்றோரால் கருதப்படும் (௫௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.   (௫௱௭௰௬ - 576)
 

கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர் (௫௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.   (௫௱௭௰௭ - 577)
 

கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை (௫௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.   (௫௱௭௰௮ - 578)
 

தொழிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும் (௫௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.   (௫௱௭௰௯ - 579)
 

தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும் (௫௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.   (௫௱௮௰ - 580)
 

விரும்பத்தகுந்த ‘கண்ணோட்டம்’ என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள் (௫௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: காம்போதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
காணும் கண்ணோட்டம் இனிதே - உலகில்
காணும் கண்ணோட்டம் இனிதே
காட்சிக் கெளிய இறைமாட்சியதன் அழகைக்

அநுபல்லவி:
பூணும் அணி பணிகள் பொன் வயிர மென்றாலும்
காணும் கண்ணோட்டத்தின் முன் கருதவும் நிகராகுமோ

சரணம்:
மண்ணோடியைந்த மரம் எனும் வசை தீரவும்
மனிதன் கண் புண்படாத வழியினைச் சாரவும்
பண்ணோடியைந்த தமிழ்ப் பண்பாடல் தேறவும்
பாங்குறும் தன் கருமம் சிதையாது
தாங்கிடும் வல்லமையும் குறையாது

ஒறுத்தாற்றும் பண்பினார்க் காணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலையெனும் குறள்நாடி
வெறுத்திடார் நஞ்சுண்ணவும் விரும்புவார் கூடி
விளங்கிடவே உயிர்க்கருள் செயும் வாயில்
களங்கமிலாத நல்லாட்சியின் கோயில்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22