கேள்வி

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.   (௪௱௰௧ - 411)
 

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும் (௪௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.   (௪௱௰௨ - 412)
 

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும் (௪௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.   (௪௱௰௩ - 413)
 

செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக் கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள் (௪௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (௪௱௰௪ - 414)
 

தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போலத் துணையாகும் (௪௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (௪௱௰௫ - 415)
 

நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல் போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும் (௪௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.   (௪௱௰௬ - 416)
 

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும் (௪௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.   (௪௱௰௭ - 417)
 

நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள் (௪௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.   (௪௱௰௮ - 418)
 

கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும் (௪௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.   (௪௱௰௯ - 419)
 

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள் (௪௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.   (௪௱௨௰ - 420)
 

கேள்வியாகிய அறிவுச் சுமையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான் (௪௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ரவிசந்திரிகா  |  தாளம்: ஆதி
பல்லவி:
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமே
செல்வத்துள் ளெல்லாம் தலையாகுமே

அநுபல்லவி:
கல்வியின் பயனே கேள்வியாலன்றோ
கருதும் பொருள் காண வேறுண்டோ

சரணம்:
வழுக்கும் நிலத்தில் ஊன்றும் கோலைப் போல
வலிவாய் நடக்க உதவும் மென்மேலே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்லதாலே
உண்டாகும் திண்மை கொண்டாடும் உண்மை

புவியிலோர் விலங்கும் புசிக்கும் உணவு
போற்றும் கேள்விதான் மாந்தரின் உயர்வு
செவிக் குணவில்லாத போழ்தே சிறிது
வயிற்றுக்கும் ஈயும் குறளே இனிது
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22