துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.   (௩௱௪௰௧ - 341)
 

எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை (௩௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.   (௩௱௪௰௨ - 342)
 

துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும் (௩௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.   (௩௱௪௰௩ - 343)
 

ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டு விட வேண்டும் (௩௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.   (௩௱௪௰௪ - 344)
 

ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலக போகத்தில் மயங்கியதே யாகும் (௩௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.   (௩௱௪௰௫ - 345)
 

பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ? (௩௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.   (௩௱௪௰௬ - 346)
 

உடலை ‘யான்’ எனவும், பொருள்களை ‘எனது’ எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான் (௩௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.   (௩௱௪௰௭ - 347)
 

பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும் (௩௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.   (௩௱௪௰௮ - 348)
 

அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர் (௩௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.   (௩௱௪௰௯ - 349)
 

பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும்; மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும் (௩௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.   (௩௱௫௰ - 350)
 

பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க (௩௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: எதுகுலகாம்போதி  |  தாளம்: மிஸ்ரசாப்பு
பல்லவி:
ஆசையெல்லாம் விடுத்தே
அமையும் துறவிகளே
அருளின் விளக்கம் என்போம்

அநுபல்லவி:
பாசபந்தம் கடந்தே பகையாம் ஐம்புலன்வென்றே
பற்றற்றான் தாளிணையை
பற்றும் மெய்ஞ்ஞானம் கொண்டே

சரணம்:
மாசு மறுவில்லாத மனமும் குணமும் சேர
மனிதன் யான் எனதென்னும் மமதை விலகிப்போக
இயேசு புத்தர் இளங்கோ இராமலிங்கர் மகாத்மா
இதயம்போல் அருள் உதயமாகவே
எண்ணும் குறள் வழி இன்புற்றோங்கவே
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22