கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.   (௩௱௨௰௧ - 321)
 

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும் (௩௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (௩௱௨௰௨ - 322)
 

உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது! (௩௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.   (௩௱௨௰௩ - 323)
 

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும் (௩௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.   (௩௱௨௰௪ - 324)
 

நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும் (௩௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.   (௩௱௨௰௫ - 325)
 

வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள் (௩௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.   (௩௱௨௰௬ - 326)
 

கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது (௩௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.   (௩௱௨௰௭ - 327)
 

தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது (௩௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.   (௩௱௨௰௮ - 328)
 

கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்று வரும் ஆக்கம் இழிவானதே யாகும் (௩௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.   (௩௱௨௰௯ - 329)
 

கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர் (௩௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.   (௩௱௩௰ - 330)
 

நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர் (௩௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சகானா  |  தாளம்: ஆதி
பல்லவி:
கொலை செய்யும் எண்ணமோ கொண்டீர் நீர் ஐயா
கூடுமோ இது சொல்வீர் நல் வாழ்க்கையில்

அநுபல்லவி:
மலையெனவோ உமது வாழ்நாளை மதித்தீர்
மற்ற உயிரைக் கொல்லும்
குற்றமேனோ அடுத்தீர்

சரணம்:
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்று மேலோர்
வகுத்த நல்லாறெனப்படுவதேன் மறந்தீர்
வாழ்ந்திடும் உயிர்களை வதைக்கவோ பிறந்தீர்

தன்னுயிர் நீப்பினும் உயிர்க்கொலை தகுமா
தாழ்விலங்காவதில் உமக்குச் சம்மதமா
மன்னுயிர் ஓம்பும் நல்லறம் விளங்கிடுமா
வண்டமிழ்க் குறள்வரி உன் கண்ணிற்படுமா
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22