கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.   (௨௱௮௰௧ - 281)
 

உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும் (௨௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.   (௨௱௮௰௨ - 282)
 

‘பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம்’ என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவு கூடத் தீமையானதே (௨௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.   (௨௱௮௰௩ - 283)
 

களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும் (௨௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.   (௨௱௮௰௪ - 284)
 

களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும் (௨௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.   (௨௱௮௰௫ - 285)
 

பொருள் தேடுதலையே நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை (௨௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.   (௨௱௮௰௬ - 286)
 

களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே (௨௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.   (௨௱௮௰௭ - 287)
 

‘களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும் (௨௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.   (௨௱௮௰௮ - 288)
 

அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே ‘அறம்’ நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே ‘வஞ்சகம்’ எப்போதும் நிலைத்திருக்கும் (௨௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.   (௨௱௮௰௯ - 289)
 

களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர் (௨௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.   (௨௱௯௰ - 290)
 

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது (௨௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பேகடா  |  தாளம்: ஆதி
பல்லவி:
கூடா ஒழுக்கத்துடன் கூடும் களவு தன்னைக்
கூடவும் கூடாதே நண்பா

அநுபல்லவி:
கேடாகும் களவின் கண் கிளைத்திடும் காதலால்
கிட்டும் பயன் நுகர்ந்தால்
ஓட்டும் நம்மைத் துன்பமே

சரணம்:
"களவினா லாகிய ஆக்கம் அளவிறந்து
வளர்வது போலக்கெடும்" என்னும் உண்மை அறிந்து
அளவின்கண் நின்றொழுகும் ஆற்றல் மிகப் பெறுவாய்
அன்பருள் சார்ந்து நின்றே துன்பமெல்லாம் தவிர்வாய்

பஞ்சப் பிணிகள்பல பயமுறுத்த வந்தாலும்
பார்ததுன்னைத் தண்டிப்பவர் யாருமில்லை என்றாலும்
வஞ்சித்து வாழும் எண்ணம் நெஞ்சத்திலும் கொள்ளாதே
வள்ளுவர் சொல்லும் நல்லவழி இது தவறாதே
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22