கூடாவொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.   (௨௱௭௰௧ - 271)
 

வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும் (௨௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.   (௨௱௭௰௨ - 272)
 

தன் நெஞ்சம், தான் அறிந்து செய்யும் குற்றத்திலேயும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத்தோற்றமும் என்ன பயனைச் செய்யும்? (௨௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.   (௨௱௭௰௩ - 273)
 

மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு, புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும் (௨௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.   (௨௱௭௰௪ - 274)
 

தவக் கோலத்திலே மறைந்து கொண்டு தீயசெயல்களைச் செய்தல், கொலை குறித்த வேடன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும் (௨௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.   (௨௱௭௰௫ - 275)
 

பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், ‘என்ன செய்தோம்?’ என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும் (௨௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௨௱௭௰௬ - 276)
 

நெஞ்சிலே ஆசையை விடாதவர்களாய், வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்! (௨௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.   (௨௱௭௰௭ - 277)
 

புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர் (௨௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.   (௨௱௭௰௮ - 278)
 

மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவார் (௨௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.   (௨௱௭௰௯ - 279)
 

நேரானாலும் அம்பு கொடுமை செய்வது; வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது; மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும் (௨௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.   (௨௱௮௰ - 280)
 

உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும்; உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம் (௨௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தேவமனோகரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
வீணில் மயங்காதே - மனமே
வெறும் வெளித்தோற்றத்தில்
பெறும் மதியை இழந்தே

அநுபல்லவி:
காணும் சின்னங்கள் பூணும் அணிபணிகள்
மாணல்ல மனிதர்க்கு
மனத் தூய்மையே வேண்டும்

சரணம்:
வஞ்ச மனமுடையோர் பொய்யொழுக்கமானத்து
வானுயர் தவக்கோலம் கொண்டாலும் பயன் ஏது
நஞ்சினுமே கொடிய நெஞ்சிரக்கமில்லாதார்
நடிப்புத் துறவைக்கண்டே ஞானிகள் இவர் என்று

மறைந்து புதரில் வேடன் வலைவீசி நிற்பதுபோல்
வலிவு இல்லாத பசு புலித்தோலைப் போர்த்தது போல்
நிறைந்த சடை முடியால் நீண்ட தாடி அங்கியால்
கரந்துயிர் பிழைக்கின்ற கபடர்களை அணுகி

அம்பு நேராயினும் அதன் தன்மையோ கொடிதாம்
யாழின் கொம்புதான் வளைவாயினுமே இனிதாம்
அம்புவியில் இவைபோல் அவரவர் செயல் பண்பாய்
அமைவது காட்டும் குறள் அறிவு பெற்றே தெளிவாய்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22