அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.   (௨௱௪௰௧ - 241)
 

அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே! (௨௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.   (௨௱௪௰௨ - 242)
 

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க; பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் (௨௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.   (௨௱௪௰௩ - 243)
 

இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும் (௨௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.   (௨௱௪௰௪ - 244)
 

நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை! (௨௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.   (௨௱௪௰௫ - 245)
 

அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று (௨௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.   (௨௱௪௰௬ - 246)
 

அருள்தலிலே இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே, உறுதிப் பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர் (௨௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.   (௨௱௪௰௭ - 247)
 

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும் (௨௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.   (௨௱௪௰௮ - 248)
 

பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள் (௨௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.   (௨௱௪௰௯ - 249)
 

அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே! (௨௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.   (௨௱௫௰ - 250)
 

தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும் (௨௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கமாஸ்  |  தாளம்: ஆதி
பல்லவி:
அருளாளர் இவர்தானம்மா - தூய
அன்பென்னும் அன்னை தந்த
அறத்துப்பாலில் வளர்ந்த

அநுபல்லவி:
குறளார்வம் நம் நெஞ்சில்
குடிகொள்ளவே செய்யும்
கொண்டல் செந்தமிழ் தந்த
தென்றல் எனப் புகழ்நல்

சரணம்:
இருள்சேர்ந்த இன்னாத உலகில் புகாதவிதம்
என்னாளும் எவ்வுயிர்க்கும் இதம்பலவே புரியும்
அருள்சேர்ந்த நெஞ்சினர் ஆக நமக்குதவும்
அண்ணல் அவர் மொழி கன்னல்
அகம் ஒளிரும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22