புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.   (௨௱௩௰௧ - 231)
 

உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் ‘உயிருக்கு ஊதியம்’ என்பது வேறு யாதும் இல்லை (௨௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.   (௨௱௩௰௨ - 232)
 

புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது (௨௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.   (௨௱௩௰௩ - 233)
 

உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை (௨௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.   (௨௱௩௰௪ - 234)
 

உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும் (௨௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.   (௨௱௩௰௫ - 235)
 

புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒரு போதுமே கிடையாது (௨௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.   (௨௱௩௰௬ - 236)
 

உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது (௨௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்   (௨௱௩௰௭ - 237)
 

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், நம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காகவோ (௨௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.   (௨௱௩௰௮ - 238)
 

தமக்குப் பின்னரும் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள் (௨௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.   (௨௱௩௰௯ - 239)
 

புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங் கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும் (௨௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.   (௨௱௪௰ - 240)
 

வசை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர் (௨௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: விஜயநாகரி  |  தாளம்: ஆதி
பல்லவி:
வாழ்க்கையிலே புகழ் சேர்க்கை இல்லாதவர்
வாழ்ந்தும் பயன் என்னடி பாங்கி

அநுபல்லவி:
ஏழ்கடல் வைப்பினும் இசைமணமே கமழ
ஈகையினால் உயர்ந்தே
வாகை புனைந்த நாட்டில்

சரணம்:
மாரிபோல் வழங்கிய பாரிகுமண வள்ளல்
வாழ்ந்த தமிழகத்தில் மதிக்கப் பிறந்திருந்தும்
ஓரிதமும் செய்யாதார் ஒருவர்க்கும் இட்டுண்ணாதார்
பாரிடத்தின் சுமையாய்ப் பயன்விளையா நிலமாய்

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியமே இல்லை உயிர்க்" கென்பதாகவே
ஓதும் திருக்குறள் அறம் புரிவோரே
ஓங்கும் புகழ் பெறுவார் தாங்கும் நல்வாழ்வுறுவார்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22