பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   (௱௫௰௧ - 151)
 

தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும் (௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.   (௱௫௰௨ - 152)
 

அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும் (௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.   (௱௫௰௩ - 153)
 

வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும் (௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.   (௱௫௰௪ - 154)
 

நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும் (௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.   (௱௫௰௫ - 155)
 

தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள் (௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.   (௱௫௰௬ - 156)
 

தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு (௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.   (௱௫௰௭ - 157)
 

தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது (௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.   (௱௫௰௮ - 158)
 

செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும் (௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.   (௱௫௰௯ - 159)
 

எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையாளர் ஆவர் (௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (௱௬௰ - 160)
 

உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர் (௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பிருந்தாவனம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
பொறுமையே நமக்குப் புகழணியாகும்
போற்றிடுவோம் இதை நாம் மிக நாளும்

அநுபல்லவி:
வறுமையால் வாடினும் வளம்பல கூடினும்
வசையினும் வாழ்த்தினும்
மனம் தடுமாறிடாப்

சரணம்:
அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம் போன்ற தன்மை
அமையப் பெற்றாலதுவே அளித்திடும் வன்மை
இகழ்வாரையும் பொறுத்தே இயற்றுவோம் நன்மை
இதுதானே வள்ளுவம் இசைத்திடும் உண்மை

"ஒறுத்தார்க்கு இவ்வுலகில் ஒருநாளே இன்பம்
பொறுத்தார்க்கு வரும் புகழ் பொன்றும் துணையும்" என்னும்
பெறத்தகும் கருத்திதால் இயேசுவைக் காண்போம்
பிறர் நலமே கருதும் பேரன்பு பூண்போம்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22