அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.   (௭௰௧ - 71)
 

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும் (௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ - 72)
 

அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர் (௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.   (௭௰௩ - 73)
 

அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர் (௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.   (௭௰௪ - 74)
 

அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும் (௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.   (௭௰௫ - 75)
 

இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர் (௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.   (௭௰௬ - 76)
 

அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும் (௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.   (௭௰௭ - 77)
 

எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும் (௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.   (௭௰௮ - 78)
 

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம் (௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.   (௭௰௯ - 79)
 

உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? (௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.   (௮௰ - 80)
 

உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும் (௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: லதாங்கி  |  தாளம்: ஆதி
பல்லவி:
அன்பு வாழ்வில் வேண்டுமே - மெய்
அறிவு விளங்கும் வழியிதாமே

அநுபல்லவி:
என்பில்லாத புழுவைக் காயும்
ஏறும் வெய்யில தனைப்போல
அன்பில்லாத உயிரை வருத்தும்
அறத்தின் தன்மை ஆதலாலே

சரணம்:
உள்ளத் தன்பில்லாத பேர்க்கே உடலுறுப்பால் பயனுண்டாமோ
உண்மை அன்பை ஈனும் ஆர்வம் உடைமை பெருமை தள்ளலாமோ
கொள்ளத் தகுந்த அறமும் மறமும் கூட்டுகின்ற தன்மையாலே
உள்ள உயிரின் நிலையைக் காட்டும் உலகம் மகிழும் பணிகளாற்றும்
பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22